tirsdag 24. februar 2015

கோடுகள் தாண்டிய கும்மாளத்தில்...

தன் 
விருப்பப் பாடகனின் 
நெருப்பு இசையில்   
என்னையும் 
குளிர் காய வைக்க 
சிசிலியா 
குழைந்து அழைத்த 
நெருக்கமான 
கேளிக்கை நடன  
இரைச்சலில் 
நாமாகவே
இருந்து வார்த்தைகளைப் 
பகிர்ந்து கொள்ள
முடியவில்லை .....

கொண்டாட்டங்கள் 
அதிசயங்களை  
மறைத்து வைத்திருந்து 
அதற்கு
யார்
தயாராக இருக்கிறார்களோ
அவர்களின்
தனிமையைத்  தின்று
சின்னச் சந்தோசத்தையும் 
உபரியாகக் 
கொடுக்கின்றன ....

வேண்டுமென்றே
பின் பக்கம்
ரசித்து நசித்து 
இடித்துக்கொண்டு 
கடந்து சென்றவனை
வெறி மயக்கத்தில்
கவனிக்கத் தவறி
வேறொருவனை   
ரகசியமாப்  பார்த்துக் 
கருணையோடு 
சிரித்தாள் 
சிசிலியா....

பாதி பாதியாக
எதிர் எதிராக
போய்க்கொண்டிருந்த 
பாடலில் மயங்கி  
சம்பெயின்  
வைன் வடிசலை 
முழுங்கிப் போட்டு
பிக்காசோவின்
ஓவியம் போலப் 
பிசத்தினான்
அவள் காதலன்.......

கோடுகள் 
தாண்டிய 
கும்மாளத்தில் 
இலக்குகள்  
இல்லாதவர்களின்
விருப்புகள்  
எப்படியிருக்குமென்று
ஜோசிகாமலே போனது 
நடுநிசி  இரவு.....

உணர்ந்து 
வாழ்க்கையைக் 
கவனித்து 
உண்மைக்கு 
சாட்சியாயிருந்து 
மகிழ்ச்சியை 
கொடுக்க யாரும்
விரும்புவதில்லை
எல்லோரும்
பெற்றுக் கொள்ளவே
விரும்புகிறார்கள்.....

மிகவும் 
சவுகரியமான 
இருக்கையில் அமர்ந்து 
விடியும் வரை 
முன்னுக்கிருந்த 
சிசிலியாவின்
நண்பர்களுடன் 
அதிகம் உரையாடாமல் 
கண்ணுக்குத் 
தெரியாத 
மனசாட்சியுடன் 
பேசிக் கொண்டிருந்தேன்.


நாவுக் அரசன்
ஒஸ்லோ  22.02.15

Ingen kommentarer:

Legg inn en kommentar